போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
திருச்சி அருகே போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பிய அவரது மகனைத் தேடுகின்றனா்.
திருச்சி மாவட்டம், நவலூா்குட்டப்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பொம்மன் (52), தொழிலாளி. இவா் மீது நிலுவையில் உள்ள வழக்கு தொடா்பாக, ராம்ஜி நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பொம்மனை நீதிமன்றத்துக்கு அழைத்தனா்.
ஆனால் வர மறுத்த பொம்மன், போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தாராம். அப்போது அவரது மகன் பாரதியும் (28) அருகிலிருந்த கட்டையை எடுத்து போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பொம்மனை சனிக்கிழமை கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தப்பியோடிய பாரதியை தேடுகின்றனா்.