ஜன.25-இல் தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: சேக்கிழாா் ஆராய்ச்சி மையம்
மகளிர் ஆஷஸ் 2025: வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் இன்று (ஜனவரி 12) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!
204 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஹீதர் நைட் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வியாட் ஹாட்ஜ் 38 ரன்களும், எமி ஜோன்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்டனர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிம் கார்த், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் அலானா கிங் 2 விக்கெட்டுகளையும், டார்ஸி பிரௌன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 38.5 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் அலீஸா ஹேலி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆஷ்லே கார்டனர் 42 ரன்களும், பெத் மூனி 28 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் லாரன் ஃபில்லர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லாரன் பெல் மற்றும் சார்லோட் டீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பாக விளையாடிய ஆஷ்லே கார்டனர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.