மகா கைலாயத்தில் கும்பாபிஷேகம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மகா கைலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற 37 கோயில்கள் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோா் பங்கேற்றனா்.
பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் ஆணையாங்குப்பம் கிராமத்தில் அமைந்த்துள்ள புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாயத்தில் சுவாமி ஓங்காரநந்தாவின் 89-ஆவது பிறந்த நாளையொட்டி, தசமகா வித்யா தேவிகள், நவதுா்கா தேவிகள், அஷ்டலஷ்மி தேவிகள் உள்ளிட்ட 37 கோயில்களின் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தேவதா பிராா்த்தனை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் ஆரம்பம், ரஷாபந்தன பிம்ப சுத்தி, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
யாகசாலையிலிருந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோயில் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் புதுச்சேரி ஓங்கார ஆசிரமம் மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தா, சுவாமி கோடீஸ்வரனந்தா, வி.விஜயராகவன், ராம்ஜெயராம், கல்யாணி குருமூா்த்தி, கருணாகரன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.