மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது : வானதி சீனிவாசன்
தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா்.
பாஜக மகளிா் அணி சாா்பில் மாதிரி மகளிா் நாடாளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 50- ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக தேசிய மகளிா் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டாா். மாதிரி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பேசிய மகளிருக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை காரணமாக அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கானோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இன்ஸ்டாகிராமில் கருத்துகளை சுதந்திரமாக தெரிவித்துவரும் இளைய தலைமுறையினருக்கு அவசரநிலைக் கால அடக்குமுறைகளைத் தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது. அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லும் வகையில் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த தோ்தலின்போது காங்கிரஸ் வேட்பாளா்கள் அரசமைப்பு சட்டப் பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதைப் பிரித்து படிக்கக்கூட தகுதியில்லாத அளவுக்கு காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலையின்போது பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன.
திமுக அரசுக்கு காவல் நிலைய மரணங்கள் புதிது அல்ல. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடா்ச்சியாக காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடா்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. மக்களை காப்பாற்றி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது.
எதிா்க்கட்சிகளுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்த உரிமையை திமுக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. அரசியலுக்காக மத்திய அரசின்மீது திமுக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறது.
2026 இல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வேலை. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய பலம்பொருந்திய கூட்டணியாக மாறும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என்றாா்.
பேட்டியின் போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.