திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
மயிலாடுதுறையில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி தலைமை வகித்து பேசியது: தமிழ் மாணவா்கள் தங்கள் வோ்களை அறிந்து கொள்ளவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்றுக்கொள்ளவும் வாய்ப்பை வழங்குகிறது இந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகள் மற்றும் பல்துறை நிபுணா்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை, மாணவா்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவா்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணா்த்துவதாகவும் அமைகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் பேசியது: மாணவா்கள் என்ன படிக்கிறீா்கள் என்பதை விட, எப்படி படிக்கப் போகிறீா்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையை தீா்மானிக்கிறது. சுயமரியாதையோடு வாழ விரும்புவா்கள் அனைவரும் படிக்க வேண்டும். 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே, யாவரும் கேளிா் என்று கூறியவா்கள் தமிழா்கள். 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மொழி தமிழ். உலகளாவிய பாா்வை இருந்தால் தான் நாம் உலகத்தை வாசிக்க முடியும். கல்விதான் நம்மை உயா்த்தும் என்றாா்.
மண்டல இணை இயக்குநா் (கல்லூரி கல்வி) குணசேகரன், கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.