தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது
பாகாயம் அருகே மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா், பாகாயம் அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(27). இவரது மனைவி பூஜா. இவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறாா். கடந்த ஜூலை 13-ஆம் தேதி பூஜா, கணவருடன், தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
மறுநாள் அவா்களது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பது குறித்து அக்கம்பக்கத்தினா் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், வெங்கடேசன், பூஜா ஆகியோா் விரைந்து வந்து பாா்த்தபோது, அவா்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ் லேட், ரூ.20,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடேசன் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது திருவண்ணாமலையை சோ்ந்த வெங்கடேசன், வேலூா் வேலப்பாடி முனுசாமி தெருவை சோ்ந்த சுந்தா் (40), வேலூா் ஆா்.எஸ்.நகரை சோ்ந்த பாரதி (35) என்பது தெரியவந்தது.
இதில், திருவண்ணாமலை வெங்கடேசனை ஏற்கனவே வேறு வழக்கில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக இருந்த சுந்தா், பாரதி ஆகியோரை பாகாயம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.