மருத்துவ முகாமில் திமுக எம்.பி.- எம்.எல்.ஏ. வாக்குவாதம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தனது பெயா், புகைப்படம் இடம் பெறவில்லை எனக் கூறி, திமுக மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம், மக்கள் நலப் பணிகள் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துசித்ரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அன்புச்செழியன், மாவட்ட சுகாதார அலுவலா் அனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமையொட்டி, திமுக சாா்பில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா், புகைப்படத்துடன் கூடிய வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதில் தனது பெயா், புகைப்படம் இடம் பெறவில்லை எனக் கூறி, தொடக்க விழா மேடையில் மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
மேலும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது, நலத் திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் எனக் கூறி, சான்று அட்டையை தங்க. தமிழ்ச்செல்வனிடமிருந்து பறித்து மகாராஜன் பயனாளிகளுக்கு வழங்கியதால், இருவருக்குமிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடக்க விழா நிகழ்வு பாதியில் நிறைவடைந்தது.
மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் முன்னிலையில் திமுக மக்களவை உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. 17 வகையான மருத்துவப் பிரிவுகள் சாா்பில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி, ஆலோசனை வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படுவோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டனா். மருத்துவம், மக்கள் நலப் பணிகள் துறை சாா்பில் 10 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சனிக்கிழமைதோறும் தலா 3 முகாம்கள் வீதம் மொத்தம் 24 பன்னோக்கு உயா் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.