இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்தி...
மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட வேண்டும்- தமிழிசை
மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று தென் சென்னை கண்ணகி நகரில் காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சகோதரி வரலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன்.
தாயை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளை பார்க்கும் பொழுது மனது வலித்தது.
தனது துணைவியை இழந்து வாடும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது கணவர் நிலைகுலைந்து நிற்கிறார். பரிதவித்து அழுது கொண்டிருக்கும் சுற்றத்தாரையும் சகப்பணியாளர்களையும் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது.
இது தடுக்கப்பட்டிருக்க வேண்டிய மரணம்.
ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக செப்பனிடப்படாத மின் கம்பியைப் பற்றி அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்திருந்தும் அதை சரி செய்யாததினால், நேற்று பெய்த மழையினால் நீர் தேங்கி அந்த மின் கம்பி தெரியாமல் போனது. அதில் கால் வைத்த உடனேயே வரலட்சுமி உயிரிழந்தார்.
அவர் உயிர் தியாகம் செய்ததாகவே சொல்ல வேண்டும், ஏனெனில் அதிக மக்கள் நடமாடும் அந்த இடத்தில் விடியற்காலம் அவர் இழந் உயிர் பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.
நான் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்:
தூய்மை பணியாளர்கள் பணி செய்யும் பொழுது அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மழையில் பணி செய்யும்போது முழுமையான பூட்ஸ், குப்பைகளை அகற்றும்போது கையுறைகள், நோய் தொற்றாமல் இருக்க முகக் கவசங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக "சிங்கார சென்னை" என்று சொன்னாலும், தேங்கியிருக்கும் நீராலும், தூர்வாரப்படாத கால்வாய்களாலும் சின்னாபின்னமாக இருக்கும் இந்த சென்னை, இந்தச் சிறிய மழையிலேயே பலி வாங்க ஆரம்பித்து விட்டது.
மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி: ரூ. 20 லட்சம் நிதியுதவி; கணவருக்கு அரசு வேலை..!
அப்படியானால் வெள்ளம் வந்தால் எத்தனை பேர் பலியாகப் போகிறார்கள் என்று நினைக்கவே பயமாக உள்ளது.
மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு "மாநில உரிமை காப்போம்" என்ற பிரசாரம் மட்டுமே செய்யும் முதல்வர் ஸ்டாலின், முதலில் "மாநில மக்களின் உயிர்களை" காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.