மழை வெள்ளம்: மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு
பாரு: மலேசியாவிலும், தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும் கடந்த வாரம் பெய்த அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மலேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் வெறும் ஐந்தே நாள்களில் ஆறு மாதங்களுக்கு இணையான அளவுக்கு கனமழை பெய்ததில் வடகிழக்கு மாகாணமான கிளாந்தானும் அருகிலுள்ள திராங்கானு மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வார இறுதியில் மழை குறைந்தாலும், இனிவரும் நாள்களில் முன்பைவிட அதிக அளவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மேலும் லட்சக்கணக்கானவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அந்த நாட்டில் ஆறு பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆனால், தெற்கு தாய்லாந்தில் 25 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அளவுக்கு அதிகமான பருவமழையால் அங்கு 3 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையிலும், வியாழக்கிழமை வரை மீண்டும் கனமழை பெய்யும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் அந்த நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.