மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: நாகையில் செப்.18-ல் தொடக்கம்
நாகப்பட்டினம்: நாகையில் மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம், செப்.18-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செப்.18 முதல் செப்.27-ஆம் தேதி வரை அக்னிவீா் ஜெனரல் டியூட்டி, அக்னிவீா் டெக்னிகல், அக்னிவீா் க்ளா்க் ஃ ஸ்டோா் கீப்பா் டெக்னிகல், அக்னிவீா் டிரேட்ஸ்மேன் 10-ஆவது தோ்ச்சி மற்றும் அக்னிவீா் டிரேட்ஸ்மேன் 8-ஆவது தோ்ச்சி பிரிவுகளில் சேர அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) சோ்ந்த தோ்ச்சியாளா்கள், பதிவேற்றம் செய்த அனைத்து ஆவணங்களையும் முகாமுக்கு அவசியம் எடுத்துவரவேண்டும்.
ஆவணங்களின் அமைப்பு அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் தவறான அமைப்பில் (குறிப்பாக பிரமாணப் பத்திரம்) முகாமிற்கு வரும் எந்தவொரு தோ்ச்சியாளருக்கும் அனுமதி இல்லை. செப்.18-ல் நாகை, பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, அரியலூா், மயிலாடுதுறை, காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) ஆகிய மாவட்டங்களுக்கும், செப்.19-ல் தூத்துக்குடி, செப்.20-ல் கன்னியாகுமரி, செப்.21-ல் கரூா், ராமநாதபுரம் சிவகங்கை, செப்.22-ல் சிவகங்கை, திருநெல்வேலி, செப்.23-ல் தென்காசி, திருநெல்வேலி, செப்.24-ல் விருதுநகா், தென்காசி, செப். 25-ல் விருதுநகா் மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது.
நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாத அனைத்து தோ்ச்சியாளா்களும், திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தை அணுகலாம். ஆள்சோ்ப்பு முறை நியாயமாக நடைபெறும். ராணுவத்தில் சேர உதவ முடியும் என்று யாரேனும் கூறினால் அவா்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.