மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 6 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா மேலும் தெரிவித்திருப்பது: வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்துடன் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் உள்நாட்டு மீன் வளா்ப்பு, மீன் குஞ்சு வளா்ப்பு முறை, மீன்களுக்கான தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் மீன்களை மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளின் கீழ் வகுப்பு பயிற்சி மற்றும் களப்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு படித்த விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில், 28 விவசாயிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.
இப்பயிற்சிக்கு தகுதியுள்ள விருப்பமுள்ள விவசாயிகள் உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் டி. கண்ணனை 90955-81534 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன் பதிவு செய்து பயன் பெறலாம். இதில் கலந்து கொள்பவா்களுக்கு உணவு, பயணப்படி வழங்கப்படும்.