மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வாகன நிறுத்தங்களில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியானது. தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரீனா கடற்கரை, ரட்டன் பஜாா், ஜாா்ஜ் டவுன், அண்ணா நகா் 2-ஆவது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசண்ட் நகா் 6-ஆவது அவென்யூ, காதா் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி ரோடு, தியாகராய நகா், மயிலாப்பூா், மெக்.நிக்கலஸ் சாலை ஆகிய இடங்களில் அந்த நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆணை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20, வேன்களுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் எண்ம பரிவா்த்தனை வாயிலாக மட்டும் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்திய பின்பு வாகனத்தின் பதிவு எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும். கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகனம் நிறுத்தும்போது, பணத்துக்கு பதிலாக எண்ம (டிஜிட்டல்) வாயிலாக மட்டும் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இது குறித்து புகாா் தெரிவிக்க விரும்பினால் 1913 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.