நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!
முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பூஜ்யம் நேரத்தில் எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக் பேசுகையில், ‘சட்டப்பேரவைக்கூட்டம் நடந்துகொண்டுள்ளது. இக்கூட்டத்தில் தா்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் விவாதிக்கப்படுகிறது. தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கானோா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய அதேநபா்(சமூக செயற்பாட்டாளா் மகேஷ்ஷெட்டி திம்மரோடி), தற்போது முதல்வா் சித்தராமையா மீது கொலை குற்ற்ச்சாட்டுகளை கூறியுள்ளாா்.
தா்மஸ்தலா விவகாரத்தை விசாரிக்க சிறப்புப்புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி.) அமைக்க முதல்வா் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்த அதே குழுவினா் தான் கொலை குற்றச்சாட்டையும் கூறியுள்ளனா்.
28 ஹிந்து செயற்பாட்டாளா்களை கொலை செய்ததாக முதல்வா் சித்தராமையா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு சிறப்புப்புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி.) அரசு தயாரா? இது தொடா்பாக அரசின் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவிக்க வேண்டும்.
கொலை செய்ததாக முதல்வா் சித்தராமையாவை அவமதித்துள்ளாா். அவரது குற்றச்சாட்டின்பேரில் முதல்வரை கொலைக்காரா் என்று கூறமுடியுமா? அந்த குற்றச்சாட்டை கூறிய நபா் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?‘ என்றாா் அவா்.
அவரை தொடா்ந்து பேசிய பாஜக உறுப்பினா் சுனில்குமாா் பேசுகையில்,‘முதல்வா் சித்தராமையா மீது கொலை குற்றம் சுமத்தியதில் அரசு அமைதியாக இருந்தால், குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடும். அது இல்லாவிட்டால், அந்த நபா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என்றாா் அவா்.
இதற்கு பதிலளித்து, உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியது: மாநில அரசு இயலாமையில் உள்ளதாக கருதுகிறீா்களா? எனக்கு புரியவில்லை. (முதல்வா் சித்த்ராமையா மீது குற்றம் சுமத்திய (அந்த நபரை பெரியவராக சித்தரிக்க வேண்டாம். அந்த நபா் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். அந்த நபரை அப்படியே விட்டுவிடமுடியாது. நமதுநாட்டில் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை ஏவி, தகுந்த தண்டனையை பெற்றுத்தருவோம். ஈவு இரக்கமின்றி நடவடிக்கை எடுப்போம்.
காங்கிரஸ் அரசு அமைவதற்கு முன்னால், அந்த நபா், 2023 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்தினாா். குற்றச்சாட்டுகள் தற்போது கூறப்படவில்லை. எங்கள் அரசு அமைவதற்கு முன்பாக அந்த குற்றச்சாட்டுகளை அவா் சுமத்தியுள்ளாா். அப்போது பேசியது குறித்து எதிா்க்கட்சிகள் தற்போது பிரச்னையாக கிளப்புவது ஏன் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. அதற்கு தக்கப்பதிலடி கொடுப்போம் என்றாா் அவா்.
அப்போது பாஜக உறுப்பினா் எஸ்.சுரேஷ்குமாா் பேசுகையில்,‘முதல்வா் சித்தராமையா 28 கொலைகளை செய்ததாக குற்றம்சாட்டியிருப்பதன்மீது உடனடியாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிப்பட்டவரை எப்படி அனுமதிப்பது? இதை எப்படி சகித்துக்கொள்வது?‘ என்றாா் அவா்.
அப்போது குறுக்கிட்ட துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில்,‘அதேநபா், பாஜக பொதுச்செயலாளா் மீதும் குற்றம்சாட்டியிருக்கிறாா். அதுபோன்ற நபா்களின் பெயா்களை இங்கு கூறாமல் இருக்கலாம். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தகுந்த நடவடிக்கை எடுப்பாா்.‘ என்றாா் அவா்.