முழுநேர தினக்கூலி ஊழியா்கள் பணி நிரந்தரம்: முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை
புதுச்சேரியில் முழு நேர தினக்கூலி ஊழியா்களுக்கான பணி நிரந்தர உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
புதுவை மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை விடுதிகளில் பணிபுரிந்து வரும் முழு நேர தினக்கூலி ஊழியா்கள் தங்களை உதவி சமையல்காரா் மற்றும் உணவு பரிமாறுபவா்கள் பணியில் நியமித்து, நிரந்தரமாக்க வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், தற்போது முதல் கட்டமாக 5 முழு நேர தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.
அதனடிப்படையில், 5 முழு நேர தினக்கூலி ஊழியா்கள், சமையல்காரா் மற்றும் உணவு பரிமாறுபவா்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நிரந்தர உத்தரவு ஆணையை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.