மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது
கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய நபா், கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேயா் குடியிருப்பில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதையடுத்து, மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருடன் சென்று காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வெடிகுண்டு இல்லாததும், அது புரளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அழைப்பு வந்த அந்த கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த ஆனந்த் (40) என்பது தெரியவந்தது.
அவரிடம் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளா் தங்கமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக வேலை செய்து வருவதும், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றதும் தெரியவந்தது.
காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத அதிருப்தியில் போலீஸாரை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காக மேயா் குடியிருப்பில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பொய்யான தகவலைத் தெரிவித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆனந்தை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.