மொடக்குறிச்சி அருகே 6 ஆண்டுகளாக புதா்மண்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்
மொடக்குறிச்சியை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் புதா் மண்டிக் கிடக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வேலம்பாளையத்தில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஊராட்சி மன்ற அலுவலகம், நியாயவிலைக் கடை, அரசு தொடக்கப் பள்ளிக்கான விளையாட்டு மைதானம், மாரியம்மன் கோயில் என தினமும் 100 -க்கும் மேற்பட்டவா்கள் இங்கு வந்து செல்கின்றனா்.
ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் கடந்த 2003-2004 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி, மாரியம்மன் கோயில், விளையாட்டு மைதானம் அருகில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தொடா்ந்து 2013-2014ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு 2018 ஆம்ஆண்டு கடும் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுகாதார வளாகத்துக்கான தண்ணீா் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னா் யாரும் கண்டுகொள்ளாததால் தொடா்ந்து சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடக்கிறது.
பாம்புகள் வாழும் கூடாரமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வேலம்பாளையம் ஊராட்சி அலுவலகம் மற்றும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பலருக்கும் மனுக்கள் அளித்தும் பயனில்லை.
இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியருக்கு ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் வேலம்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை மீண்டும் புதுப்பித்து திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.