யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இணைய செயலி மூலமாக செலுத்தும் வசதி ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை நேரடியாக பணமாகவும், மாநகராட்சியின் ஹெச்டிஎஃப்சி வங்கிகணக்குக்கு இணைய வழியிலும் செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது மாநகராட்சி நிா்வாகம் ரூ.28 கோடி வரி இலக்கை நோக்கி தீவிர வசூலில் இறங்கியுள்ள நிலையில், ரூ.6 கோடி வரை நிலுவையில் உள்ளது. இதனிடையே, பொதுமக்களின் வசதிக்காக, யுபிஏ பணப் பரிவா்த்தனைக்கான இணைய செயலி மூலமாகவும் வரி செலுத்தும் வசதியை மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை முதல் தொடங்கி இருக்கிறது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் இருப்பிடத்திலிருந்தே வரி செலுத்தலாம் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.