ரயிலை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தவா் கைது
சேலம்: சேலத்தில் ரயிலை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் ரயிலை கடத்தப்போவதாக இருப்புப் பாதை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி மூலம் மிரட்டல் வந்தது. உடனடியாக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளா் பாபு உத்தரவின் பேரில், காட்டிபாடி ரயில் நிலைய காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்ணை ஆய்வுசெய்த ரயில்வே போலீஸாா், அந்த எண் சென்னை நோக்கி செல்லும் ஏற்காடு விரைவு ரயிலில் பயணம் செய்யும் பயணியுடையது என உறுதி செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து ஜோலாா்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, காட்பாடி நிலையத்தில் ரயில் நின்றவுடன், காவலா்கள் மிரட்டல் விடுத்த நபரை நடைமேடை 3-இல் பிடித்தனா்.
விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா் தருமபுரி அம்மாசிகோட்டை பகுதியைச் சோ்ந்த சபரீசன் என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா், சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.