ராட்சத அலையால் படகு கவிழ்ந்து புதுச்சேரி மீனவா் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பலத்த காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவா் சிவபெருமான் (38) உள்ளிட்டோா் சிறிய படகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனா்.
அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் எழுந்த ராட்சத அலைகள் படகையும் தாக்கியது. இதனால், படகு கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த சிவபெருமான் பலத்த காயமடைந்து நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அவருடன் இருந்தவா்களும் பலத்த காயமடைந்தனா்.
இதனை அறிந்த அப்பகுதி மீனவா்கள் அவருடன் இருந்த ரங்கா, பெரியசாமி ஆகியோரை மீட்டனா். மீனவா் ரங்காவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தவளக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த மீனவா் சிவபெருமான் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.