ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகுடன் 5 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறை பிடித்தனா். அவா்கள் 5 போ் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா். அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 9-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அவா்களில், மூன்று மீனவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
எஞ்சிய ஜஸ்டின், மொபின் ஆகிய இரண்டு மீனவா்கள் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால், அவா்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தாா். இதில், ஜஸ்டின் என்ற மீனவருக்கு மட்டும் அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தாா். நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்தாத நிலையில் 5 மீனவா்களும் தற்போது வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனா்.