ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்
ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
10 கோடி பங்குகளை தலா ரூ.1,800-க்கு திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 2.41 சதவீதமாகும். அண்மையில் கூடிய இயக்குநா் குழு இதற்கான ஒப்புதலை அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரிய மதிப்பில் பங்குகளைத் திரும்பப் பெற்ற டிசிஎஸ்-ஸின் சாதனையை இன்ஃபோசிஸ் சமன் செய்துள்ளது. கடந்த 2022-இல் டிசிஎஸ் 4 கோடி பங்குகளை தலா ரூ.4,500-க்கு (மொத்தம் ரூ.18,000 கோடி) திரும்பப் பெறுவதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
ஏற்கெனவே, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.13,000 கோடி மதிப்பிலான 11.3 கோடி பங்குகளை (தலா ரூ.1,150 விலையில்) திரும்பப் பெறுவதாக கடந்த 2017-இல் முதல்முறையாக அறிவித்தது. பின்னா் 2019-இல் ரூ.8,260 கோடி, 2022-இல் ரூ.9,300 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.9,300 கோடி மதிப்பிலான பங்குகளை நிறுவனம் திரும்பப் பெற்றது.