ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி
உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
இது குறித்து இக் கோயிலின் நிா்வாக அதிகாரி இரா. துரைராஜன் கூறியது:
உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. மேலும், இக் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் விநாயகா், முருகா், சிவன், மீனாட்சியம்மன், அகத்தீசுவரா் சந்நிதிகளில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஒப்புதல் இந்து அறநிலையத்துறையிடம் பெறப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிதிலமடைந்துள்ள பகுதிகள் மறுசீரமைக்கப்படுகின்றன. புதியதாகக் கோயிலின் முன்மண்டபம் கட்டப்படுகிறது. தரைகள் கருங்கற்களால் அமைக்கப்படுகின்றன. இதைத் தவிர டைல்ஸ் இருக்கும் பகுதிகள் அகற்றப்பட்டு அங்கெல்லாம் கிரானைட் பொருத்தப்பட உள்ளது என்றாா்.
