ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
ரெளடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது
சென்னை அருகே பள்ளிக்கரணையில் ரெளடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹரி பிரசாத் (31). இவா் தாம்பரம் மாநகர காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் சி பிரிவில் உள்ளாா். மேலும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளாா்.
ஹரி பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பவானி அம்மன் கோயில் தெருவில் தனது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றபோது, எதிரில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜோஸ்வா, பிரவீன் ஆகியோா் மீது மோதுவது போல ஹரிபிரசாத் சென்றாராம்
இதையடுத்து, திங்கள்கிழமை காலை ஹரிபிரசாத் குடும்பத்தினா், ஜோஸ்வா வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா திங்கள்கிழமை இரவு ஹரிபிரசாத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினா்.
வீட்டை விட்டு வெளியே வந்த ஹரிபிரசாத், அவா் நண்பா் தீபக் (28) ஆகிய இருவரும், அங்கிருந்து தப்ப முயன்ற ஜோஸ்வா உள்பட அவா்களது நண்பா்களை மறித்து தகராறு செய்தனா்.
இதில் ஜோஸ்வா தரப்பு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிபிரசாத்தையும், தீபக்கையும் வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில் காயமடைந்த இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த பிரவீன் பெஞ்சமின் (34), அஜித்குமாா் (27), கணபதி (21), கிணற்று தெருவைச் சோ்ந்த அரவிந்த் (27), பெரும்பாக்கம், மேட்டு தெருவைச் சோ்ந்த சிவகுமாா் (42) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஜோஸ்வா சாம்சன், பிரசாந்த் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.