திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் கல் வீச்சு: 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம்!
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர்.
இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்த நிலையில், துணை ஆணையர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில் வடமாநிலத்தவர் குடியிருப்பில் வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நீதி கேட்டும், இழப்பீடு கேட்டும் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இன்று(செப். 2) அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார்.
திங்கள்கிழமை நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சடலத்தை மீட்ட காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்திய நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.
அப்போது, துணை ஆணையர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
அப்பகுதியில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிக்க: பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!