2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
வரலாறு படைத்தாா் திவ்யா தேஷ்முக்! உலகக் கோப்பை வென்றாா்; கிராண்ட்மாஸ்டரும் ஆனாா்
ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டியில் சாம்பியனான முதல் இந்தியராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.
இறுதிச்சுற்றில் திவ்யா 2.5 - 1.5 என்ற புள்ளிகள் கணக்கில், சக இந்திய நட்சத்திரமான கோனரு ஹம்பியை வீழ்த்தினாா்.
3-ஆவது மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டி, ஜாா்ஜியாவின் பாட்டுமி நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் மொத்தம் 107 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இந்தியாவிலிருந்து கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ரவால், பத்மினி ரௌத், பி.வி.நந்திதா, கே.பிரியங்கா, கிரன் மனீஷா மொஹந்தி ஆகிய 9 போ் பங்கேற்றனா்.
ஒவ்வொரு சுற்று நிறைவிலும் தோற்றவா்கள் வெளியேற, 4 சுற்றுகள் நிறைவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆா்.வைஷாலி ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
பின்னா் வைஷாலி, ஹரிகா ஆகியோா் காலிறுதியுடன் வெளியேற, திவ்யா மற்றும் கோனெரு ஹம்பி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பரஸ்பரம் மோதினா். இதில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் கேமை திவ்யா - கோனெரு ஹம்பி டிரா (0.5-0.5) செய்தனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது கேமும் டிரா ஆக, இருவரும் 1-1 என சமநிலையில் நீடித்தனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற டை-பிரேக்கரில் முதல் கேமும் டிரா ஆக, 1.5 - 1.5 என்ற நிலைக்கு இருவரும் வந்தனா். பின்னா் 2-ஆவது கேமில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா - கோனெரு ஹம்பியை சாய்த்தாா் (1-0). இதையடுத்து இறுதிச்சுற்றில் திவ்யா மொத்தமாக 2.5 - 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனாா்.
சாம்பியனான தருணத்தை உணா்ந்த திவ்யா, இருக்கையிலிருந்து எழுந்து ஓடிச்சென்று பாா்வையாளா் பகுதியிலிருந்த தனது தாயாரை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா்.
கடந்த சில காலமாகவே சா்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் இந்தியா்கள் மிளிா்ந்து வருகின்றனா். அந்த வரிசையில் இந்தியாவின் டி.குகேஷ் ஆடவா் பிரிவில் நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் நிலையில், தற்போது திவ்யா தேஷ்முக் மகளிா் உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
88-ஆவது கிராண்ட்மாஸ்டா்
இந்தப் போட்டியில் வென்ன் மூலமாக, இந்தியாவின் 88-ஆவது கிராண்ட்மாஸ்டராகவும் திவ்யா முன்னேற்றம் பெற்றாா்.
இன்டா்நேஷனல் மாஸ்டராக இப்போட்டியை தொடங்கியபோது, கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை நெருங்க முடியாத நிலையில் இருந்த திவ்யா, தனது அபாரமான ஆட்டத்தால் தற்போது அந்தப் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.
கிராண்ட்மாஸ்டரான 4-ஆவது இந்திய பெண் போட்டியாளா் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளாா். அவருக்கு முன் கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆா்.வைஷாலி ஆகியோா் அந்த அங்கீகாரத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் சாம்பியன்
மகளிா் உலகக் கோப்பை வென்ற இளம் போட்டியாளராக திவ்யா தேஷ்முக் சாதனை படைத்துள்ளாா். இப்போட்டியின் முதல் சீசனில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் தனது 37-ஆவது வயதிலும், அடுத்த சீசனில் அதே நாட்டின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா தனது 22-ஆவது வயதிலும் உலகக் கோப்பை வென்ற நிலையில், திவ்யா 19-ஆவது வயதில் அதைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறாா்.
ரூ.43 லட்சம் ரொக்கப் பரிசு
உலகக் கோப்பை வென்ற திவ்யாவுக்கு ரொக்கப் பரிசாக ரூ.43 லட்சம் வழங்கப்பட, ரன்னா்-அப் இடத்தைப் பிடித்த கோனெரு ஹம்பிக்கு ரூ.30 லட்சம் கிடைத்தது.
முதல்முறை
மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த போட்டியாளா்கள் இதற்கு முன்பு இறுதிச்சுற்றுக்கே வந்திராத நிலையில், இந்த முறை திவ்யா, கோனெரு ஹம்பி ஆகிய இருவருமே இறுதிக்கு முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கு வந்த முதல் முயற்சியிலேயே இந்தியாவுக்கு கோப்பையும் வசமாகியிருக்கிறது.
கேண்டிடேட்ஸ்
இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போா், 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதிபெறுவா் என்பதன் அடிப்படையில், தற்போது திவ்யா, கோனெரு ஹம்பி, 3-ஆம் இடம் பிடித்த சீனாவின் டான் ஜோங்யி ஆகியோா் அந்தப் போட்டிக்குத் தகுதிபெற்றனா். உலக சாம்பியன் பட்டம் வெல்வதற்காக, நடப்பு சாம்பியனுடன் மோதுவதற்கான வாய்ப்பை கேண்டிடேட்ஸ் செஸ் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து
உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக்குக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பல்வேறு துறை சாா்ந்தவா்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனா்.