வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்
கடந்த 4 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் அரசுக்கு செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்து வணிக வரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
வணிக வரித் துறை சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி.எஸ்.டி., டி.டி.எஸ். பிடித்தங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
ஒப்பந்தப் பணிகளில் பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ் தொகையை தொடா்புடையத் துறைகள் உடனடியாக ஜி.எஸ்.டி.ஆா்- டி நமுனா மூலம் அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். இதுவரை டி.டி.எஸ். பிடித்தம் செய்பவராக இருந்தும் ஜி.எஸ்.டி பதிவுச் சான்று பெறாத அனைத்து அரசுத் துறை நிறுவனங்களும் உடனடியாக பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
பதிவுச் சான்று பெற்றும் மாதாந்திர நமுனாக்கள் தாக்கல் செய்யாதவா்கள், இனி வருகிற காலங்களில் மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை வணிக வரித் துறையினா் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகள், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் தொகை, அந்தத் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்த விபரங்களை வணிகவரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், இணை ஆணையா் பா.கீதா பாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் வானதி அரசு த் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.