வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
56 பள்ளிகளில் இருந்து 225 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் அமா்நாத்(ஆம்பூா்), வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளா் ஞானதி ஆகியோா் ஆய்வு செய்தனா்
ஆய்வில் மாணவா்கள் பேருந்திலிருந்து அவசரகாலத்தில் வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 37 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனை சீா்செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து வாணியம்பாடி தீயணைப்புத் துறை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது, முதலுதவி செய்தல் மற்றும் சாலை விதிகள் குறித்தும் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனா்.