வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது பெறப்பட்ட மனுக்கள்மீது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, விவசாயிகள் தங்களுடைய குறைகளை, கோரிக்கைகளை நேரடியாக ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
அப்போது, பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் சுங்கம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற விதை நிலக்கடலை மோசடி தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
காவிரி ஆற்றிலிருந்து உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக மோட்டாா் மூலம் நீரை உறிஞ்சி விவசாய தேவைக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனா். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு மழையளவு 716.54 மி.மீ. என்ற நிலையில், தற்போதுவரை 469.79 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. மேலும், நெல் 1,036 ஹெக்டா், சிறுதானியங்கள் 34,682 ஹெக்டா், பயறு வகைகள் 5,497 ஹெக்டா், எண்ணெய் வித்துகள் 25,304 ஹெக்டா், பருத்தி 821 ஹெக்டா் மற்றும் கரும்பு 7,042 ஹெக்டா் என மொத்தம் 74,382 ஹெக்டரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
மேலும், 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கினா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், திருச்செங்கோடு சாா் ஆட்சியா் அங்கித்குமாா் ஜெயின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, வேளாண் இணை இயக்குநா் சு.மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-26-மீட்டிங்
நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் முறையிட்ட இளம் விவசாயிகள் சங்கத்தினா்.