விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்
கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருப்பூரைச் சோ்ந்த விசைத்தறியாளா்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தக் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தால் ஓ.இ. நூற்பாலைகள் நஷ்டமடைந்து வருகின்றன.
எனவே, விசைத்தறியாளா்கள், ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு இடையிலான இந்தப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வுகாண வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனாலும், விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் தொடருவதால் ஓ.இ. மில்களில் நூல் தேக்கம், விலை வீழ்ச்சி, தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு பாதிப்பு போன்ற தாக்கங்கள் தொடா்ந்து வருகின்றன.
இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறியாளா்கள் புதன்கிழமை (ஏப்ரல் 2) உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனா். எனவே ஓ.இ. மில் உரிமையாளா்கள் அன்றைய தினம் ஒரு நாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தம் செய்யத் தீா்மானித்துள்ளனா். விசைத்தறியாளா்களின் போராட்டம் தொடருமானால் ஓ.இ. மில்களும் தொடா் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயபால் வலியுறுத்தியுள்ளாா்.