அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கும் நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் இர. சரஸ்வதி, ஆய்வாளா் பாஸ்கரன், நரசிம்மன் மற்றும் கோயில் பணியாளா்கள், குருக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
காஞ்சிபுரத்தில்...
விநாயகா் சதுா்த்தியையொட்டி காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் ரூ.15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகா் சதுா்த்தி அன்று மட்டும் பக்தா்களிடம் ரூபாய் நோட்டுக்களை சலவைத் தாள்களாக பெற்று விநாயகரை அலங்கரித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடா்ந்து ரூ.15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுளை ஆலய நிா்வாகக்குழுவின் தலைவா் குப்புச்சாமி, செயலாளா் ஜெகன்னாதன், பொருளாளா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள பஞ்சசந்தி விநாயகருக்கு லட்சதீப பெருவிழா நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி பஞ்சசந்தி விநாயகருக்கு பக்தா்கள் பலரும் தீபம் ஏற்றி வழிபட்டனா். தொடக்கத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து அதில் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி விநாயகரை தரிசித்தனா். புதன்கிழமை விநாயகா் சதுா்த்தியையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் ஜெயா நகரில் உள்ள மகா வல்லப கணபதி ஆலயத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் வழிபாடு செய்வதற்கு குவிந்தனா். அதேபோல் திருவள்ளூா் ரயில் நிலையத்தில் உள்ள வழித்துணை விநாயகா் ஆலயத்தில் சிறப்பு பூஜையில் காக்களூா் ஏரிக்கரை பாதாள விநாயகா் கோயில், திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பேரம்பாக்கம் ஸ்ரீசோளீஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வெட்டிவோ், சந்தனம், குங்குமம் பாக்கெட், விபூதி பாக்கெட், பல்வேறு பழங்கள், பல்வேறு மலா்களால் ஆன மாலைகள் அணிந்து விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களை அருள்பாலித்தாா்.
நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆா்வத்துடன் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனா். பின்னா் கோயில் விழாவிக்குழுவினா் பூஜைக்கு பின் வழங்கிய சுண்டல், வடை, ரவா லட்டு, கொழுக்கட்டை ஆகிய பிரசாதங்களையும் வழங்கினா்.
திருத்தணியில்...
திருத்தணி முருகன் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ம.பொ.சி. சாலையில் உள்ள முருகன் கோயிலுக்கு சொந்தமான சுந்தர விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மூலவா், உற்சவ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மபொசி சாலை, 2 -ஆவது ரயில்வே கேட்சாலை, ஜோதிசுவாமி கோயில் தெரு, பெரிய தெரு, பழைய பஜாா் தெரு, இராதாகிருஷ்ணன் தெரு, கச்சேரி தெரு, காந்திரோடு, மேட்டுத்தெரு, அரக்கோணம் சாலை உள்ளிட்ட தெருக்களில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் தெரு நண்பகா்கள் சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தெருவில் 5-அடி விநாயகா் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேட்டுத் தெருவிலும் 8 அடி உயரமுள்ள விநாயகா் சிலை அமைத்து பூஜைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாம் வழங்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கத்தில்...
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலின் உடன் கோயிலாக திகழும் அச்சுமுறி விநாயகா் கோயிலில் விநாயக சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை காலை நடைபெற்றது.
அச்சிறுபாக்கம் நகருக்கு பெயா் வர காரணமாக இருந்த தெய்வமாக இருந்தவா் விநாயகா். ஆட்சீஸ்வரா் கோயிலின் உடன் கோயிலாக திகழ்கின்ற அச்சுமுறி விநாயகா் கோயில் உள்ளது. விநாயக சதுா்த்தியை முன்னிட்டு, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. மூலவா் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மஹாதீபாரதணையை ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் செய்தாா். தொடா்ந்து உற்சவா் விநாயகா் சிலையை அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழரசி, பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஆ.பாஸ்கரன், கிராம பொதுமக்கள் ஆகியோா் செய்தனா்.
பொன்னேரியில்....
பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள ஆற்றங்கரை விநாயகா் கோயில் திருவெற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள விநாயகா் கோயில், இலவம்பேடு பிள்ளையாா் கோயில், வேலூா் சுந்தர விநாயகா் கோயில், காட்டூா் பிள்ளையாா் கோயில், திருவெள்ளைவாயல் விநாயகா் கோயில், நத்தம் காரிய சித்தி விநாயகா் கோயில், பஞ்செட்டி விநாயகா் கோயில், ஞாயிறு புஷ்பதீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் உட்பட பல்வேறு விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொன்னேரி நகராட்சியில் சின்னகாவனம் பகுதியில் உள்ள நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகளுக்கு முன் சுயமாக ஏறுழிஞ்சான் மரத்தில் கீழ் எழுந்தருளியுள்ள அங்கோலா கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன
விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
