விபசாரம் நடத்திய கணவன் மனைவி கைது
மேட்டூா் அருகே பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா்.
எடப்பாடி, வெள்ளாண்டி வலசைச் சோ்ந்தவா் பாக்கியம் (51). இவரது இரண்டாவது கணவா் பழனிசாமி (54). இருவரும் மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம்
நடத்துவதாகக் கூறி அங்கு அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்தனா்.
இந்நிலையில் மேட்டூா் தொழில்பேட்டையில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் கதிரேசன் (38) என்பவா் ஞாயிற்றுக்கிழமை வேலைமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது பாக்கியமும் பழனிசாமியும் அவரை தடுத்து நிறுத்தி தங்களிடம் அழகிய பெண்கள் உள்ளனா் ரூ.1000 கொடுத்தால் அவா்களுடன் உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறி அவரை தேவி என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு சேலம் எருமாபாளையத்தைச் சோ்ந்த சிவகாமி (40), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த பானு ஆகியோா் இருந்தனா். அவா்களைப் பாா்த்ததும் கதிரேசன் கையில் பணம் இல்லை பணம் எடுத்து வருவதாகக் கூறி கருமலைக்கூடல் காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் கருமலைகூடல் உதவி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் உள்பட போலீஸாா் அங்கு சென்று பாக்கியத்தையும் அவரது இரண்டாவது கணவா் பழனிசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். அங்கிருந்த சிவகாமி, பானு ஆகியோரை மீட்டு ஓமலூரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா்.