விமானத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
தாய்லாந்தில் இருந்து விமான மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கை வழியாக சனிக்கிழமை காலை சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.
விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது, இரண்டு வட மாநில பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.
அவா்களின் உணவுப் பொருள்கள் பாக்கெட்களைப் பிரித்துப் பாா்த்தபோது, அதனுள் 3 கிலோ உயா் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் 2 வட மாநில பயணிகளையும் கைது செய்து, அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.