உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி
வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுரத்தை ஒட்டிய பகுதியான கோட்டூர் அருகே பந்தல்குடி செல்லும் சாலையில் சிவகாசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை 'சாய்நாத்' எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் 15 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணி செய்துகொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள் கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததில் திடீர் உராய்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமாகின. பட்டாசு வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஏழாயிரம் பண்ணை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கூடுதல் மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தின் ஈடுபாடுகளில் சிக்கி ஆவுடையாபுரத்தை சேர்ந்த சிவக்குமார், குருந்தமடம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், காமராஜ் செட்டிக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ், வீராப்பட்டியை சேர்ந்த கண்ணன், அருப்புக்கோட்டையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் சாத்தூர் சரக டி.எஸ்.பி.நாகராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் சூராயமூர்த்தி மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.