விரைவில் டாக்ஸி பயன்பாட்டுக்கு அறிமுகமாகும் கியா கேரன்ஸ் இவி!
கியா நிறுவனம் வணிக பயன்பாட்டுக்கான தனது முதல் இவி காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கியா நிறுவனம் ஏற்கெனவே அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்று வரும் கேரன்ஸ் இவி மாடல் போன்ற காரைதான் வணிக பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யவுள்ளனர்.
இந்த மாடலுக்கு கியா கேரன்ஸ் இவி எச்.டி.எம். எனப் பெயரிட்டிருப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய 7 சீட்டர் காராக இருக்கும் கேரன்ஸ், வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் பல முன்னணி 7 சீட்டர் கார்களின் விற்பனை மந்தமாகும்.
பேட்டரி வசதி
இந்த காரில் 42 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 404 கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொள்ள முடியும்.
133 குதிரைத் திறன் மற்றும் 255 Nm டார்க் திறனை உருவாக்கும். 10 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதம் வரை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் ஏறும்.
உட்புற அம்சங்கள்
12.25 அங்குல எச்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், 12.25 அங்குல டிஜிட்டல் தொடுதிரை உள்ளது. 6 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பேபிரிக் மற்றும் செமி லெதரேட் இருக்கைகள் ஆகியவையும் உள்ளன.
இதில், 6 அவசரகால பொத்தான்கள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
வணிகப் பயன்பாட்டுக்கான கேரன்ஸ் எச்.டி.எம். மாடல் காரின் தொடக்க விலை ரூ. 18.19 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கியா கேரன்ஸ் இவி மாடல் கார்களின் விலை ரூ. 11.50 முதல் ரூ. 21.50 லட்சம் வரை வசதிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.