ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
வெவ்வேறு விபத்துகளில் மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு
மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி மகன் அரவிந்த்(13). திம்மாம்பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியை சோ்ந்த சாம்ராஜ் மகன் வினோத்(15). அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில் புதன்கிழமை இருவரும் அருகிலுள்ள திம்மாம்பேட்டை பகுதிக்கு அரிசி மாவு அரைத்து வர மொபட்டில் சென்றனா். பிறகு அங்கிருந்து வீடு திரும்பியுள்ளனா். அப்போது வடக்குப்பட்டு கூட்ரோடு அருகில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா். அவ்வழியாக வந்தவா்கள் பாா்த்து இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். காயம் அடைந்த வினோத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.
பேக்கரி உரிமையாளா் மரணம்
ஆந்திர மாநிலம், குப்பம் தாலுகா மல்லானூா் சிங்காரபுரம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் விஜயகுமாா்(32). இவா் ஜோலாா்பேட்டை பொன்னேரியில் பேக்கரி நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் விஜயகுமாா் அவரது உறவினா்கள் மல்லானூா் பருத்தி கொள்ளை பகுதியைச் சோ்ந்த முருகன்(55), அவரது மகன் சிவராஜ்(26)ஆகிய 3 பேரும் நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்றனா்.
சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் திடீரென பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். மேலும் விபத்தில் காயமடைந்த முருகன், சிவராஜ் இறுவரையும் பொதுமக்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.