பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சி...
வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11-11-2021 அன்று, `பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK)’ திட்டத்தின்கீழ் மருத்துவமனைக்கான ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. சிறுபான்மையினர் கணிசமாக வசிக்கும் பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். அதன்படிதான் மாநில அரசின் உறுதிமொழி மூலம் வேலூரின் மையப்பகுதியான பென்ட்லேண்ட் வளாகம் தேர்வுசெய்யப்பட்டது.
திட்டத்தின் மொத்த செலவில், மத்திய அரசு 60 சதவிகிதமும், தமிழக அரசு 40 சதவிகிதமும் நிதி பங்களிப்பு வழங்கியிருக்கிறது. அதாவது, மத்திய பங்கு ரூ.118,68,60,000. மாநில பங்கு ரூ.79,12,40,000.

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினின் வேலூர் பயணத்தின்போது, திடீரென பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ரிப்பன் வெட்டி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதலமைச்சருக்குமே தரைத்தளத்தை மட்டும் சுற்றிக்காட்டிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். ஆனாலும், `இன்றுவரை உள்கட்டமைப்புப் பணிகள் முழுமைப்பெறவில்லை. மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவில்லை. திறந்த வேகத்தில் பல்நோக்கு மருத்துவமனை மூடுவிழா கண்டிருக்கிறது’ என்கிற குற்றச்சாட்டை அ.தி.மு.க முன்வைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகிலும் அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர். `முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தலைமையில், வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் திடீரென இன்றைய தினம் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனையைப் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ கார்த்திகேயன், ``இங்க இருக்கிற கட்சிக்காரர்கள் எடப்பாடிக்குத் தவறான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அவர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எத்தனையோ இருக்கிறது. அதற்கெல்லாம் பண்ணலாம். ஆனால், இதற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மருத்துவமனை கட்டடப் பணிகள் முடிந்த நிலையில், சில்லரை வேலைகள்தான் இருக்கிறது. படிப்படியாக வேலைகள் முடிக்கப்படும். இதில், அ.தி.மு.க அரசியல் செய்கிறது’’ என்றார்.
இதுகுறித்துப் பேசுகிற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ``ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் மேடை அமைக்கவும், பேனர்களை வைக்கவும் காவல்துறை அனுமதிக்கவில்லை. மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.க-வின் அலட்சியம் குறித்து மக்களிடம் எடுத்துச்சொல்லியே தீருவோம். முதலமைச்சர் திறந்து வைத்துச்சென்ற பிறகு ஒருநாள்கூட வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் ஏன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிடவில்லை? இப்போது எடப்பாடியார் ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகே, நேற்று அவசர அவசரமாக தரைத்தளத்தில் படுக்கை வசதிகளை ஏற்படுத்திவிட்டு போட்டோ ஷுட் நடத்தி இன்று பேட்டிக் கொடுத்திருக்கின்றனர். ஏழுத் தளங்களிலும் உள்கட்டமைப்புப் பணிகள் முடியவே இல்லை. வெற்றுக் கட்டடத்தை திறந்து வைத்து, வேடிக்கைக் காட்டி நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் கொதிப்போடு.