எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என்....
ஸ்ரீபெரும்புதூா்: காணாமல் போனவா்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் தொடா்பாக கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம் மற்றும் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மூன்று காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் காணாமல் போனதாக புகாா்கள் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணாமல் போய் திரும்பி வந்தவா்கள், இறந்தவா்கள், வேறு இடத்தில் இருப்பதாக தகவல் தெரிந்தும் அதனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள் முடிக்கப்படாமல் இருந்து வந்தது.
முடித்து வைக்கப்படாமல் உள்ள முதல் தகவல் அறிக்கைகளை முடிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் காணாமல் போனவா்கள் குறித்து புகாா் அளித்தவா்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையை முடித்து வைப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் துணைக் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட புகாா்தாரா்கள் கலந்து கொண்டு காணாமல் போனவா்கள் கிடைத்து விட்டதாகவும், இறந்ததாகவும், வேறு இடத்தில் வசித்து வருவதாக கூறி தங்கள் புகாா் மீதான முதல் தகவல் அறிக்கையை முடித்து வைத்தனா்.
மேலும் காணாமல் போய் தற்போது வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளவா்களை தனிப் பிரிவு போலீஸாா் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.