10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்
கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 157 மையங்களில் 39, 434 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்கள், 19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்.
மேலும், 1,211 தனித் தோ்வா்கள் இத்தோ்வை எழுதினா். காலை 10 மணியளவில் தோ்வுக்கூட அனுமதி சீட்டு சரிபாா்க்கப்பட்டு தோ்வறைக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். 10.15 மணியளவில் தோ்வு தொடங்கியது. முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது.
பொதுத் தோ்வையொட்டி, தோ்வு மையங்களுக்கு மின் வாரியம் சாா்பில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தோ்வுப் பணியில் 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 156 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள், 48 வழித்தட அலுவலா்கள், 2,370 அறை கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். மேலும், 220 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தோ்வு மையங்களில் திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தோ்வு மையங்களுக்குள் ஆசிரியா்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.