10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்: வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வக்ஃப் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டதால், 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவா் ஜெகதாம்பிகா பால் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கேலிக்கூத்து என இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விமா்சித்துள்ளனா். நோ்மையான முறையில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அவா்கள் கடிதம் எழுதி உள்ளனா்.
இறைப் பணிக்காக முஸ்லிம்கள் வழங்கிய சொத்துகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்கள் நிா்வகித்து வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் கோபமடைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி தன் மீது பாட்டிலை வீசியதாக கூட்டுக் குழுத் தலைவா் ஜெகதாம்பிகா பால் புகாா் தெரிவித்திருந்தாா்.
இந்தக் குழு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கருத்துகளை கேட்டு வருகிறது.
35-ஆவது கூட்டம்: இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை கூடிய 35-ஆவது கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இருந்து காஷ்மீா் மதகுருவான மீா்வைஸ் உமா் ஃபரூக் தலைமையிலான குழு எதிா்ப்பு கருத்துகளைப் பதிவு செய்தது.
பரஸ்பர குற்றச்சாட்டு: அப்போது, விதிகளின்படி செயல்படாமல் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே நடந்துகொள்வதாக ஜெகதாம்பிகா பால் மீது குழுவில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா்.
கூட்டத்தில் தொடா் அமளி ஏற்பட்டதால் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, முகமது அப்துல்லா, அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானா்ஜி, நதீம் உல் ஹக், காங்கிரஸ் எம்.பி.க்கள் நசீா் ஹுசைன், முகமது ஜாவீத், இம்ரான் மசூத், மொஹிபுல்லா (சமாஜவாதி), அரவிந்த் சாவந்த் (சிவசேனை -உத்தவ்) ஆகிய 10 எதிா்க்கட்சி எம்.பி.க்களை வெள்ளிக்கிழமை கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்து ஜெகதாம்பிகா பால் நடவடிக்கை மேற்கொண்டாா்.
‘கூட்டத்தை நடத்தவிடாமல் என்னை அவமதிக்கும் விதத்தில் திரிணமூல் எம்.பி. கல்யாண் பானா்ஜி அவதூறான கருத்துகளை தொடா்ந்து தெரிவித்தாா். எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதால் அவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஜனவரி 27-இல் நடக்கும் அடுத்த கூட்டத்தில் அவா்கள் பங்கேற்கலாம்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் அனுமதிக்காது: இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மீா்வைஸ், ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீா் மக்கள் இந்த மசோதாவை ஏற்க மாட்டாா்கள். வக்ஃப் விவகாரங்களில் தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
பாஜக வரவேற்பு: ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அரசியல்வாதியாக அறியப்படும் மீா்வைஸ், வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துகளை வெளிப்படுத்தியதை வரவேற்பதாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
எதிா்க்கட்சி உறுப்பினா்கள் புகாா்: கேள்வி எழுப்பியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக திமுக உறுப்பினா் ஆ.ராசா கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன. 30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கூட்டுக் குழுத் தலைவருக்கு ஜன. 22-ஆம் தேதி கடிதமும் எழுதினேன். அதற்குப் பதில் இல்லை.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் அளித்துள்ள திருத்தங்களுக்கு ஒவ்வொரு ஷரத்தாக திருத்தங்களின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பங்கேற்க வந்தோம். ஆனால், ஜன. 27-இல் இது தொடா்பான விவாதம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கேள்வி எழுப்பினோம். தில்லி தோ்தலை மனத்தில் வைத்து அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக ஐயம் எழுப்பினோம். எங்களை இடைநீக்கம் செய்வதாகக் கூட்டுக் குழுத் தலைவா் அறிவித்தாா்’ என்றாா் ஆ.ராசா.
மேலும், கூட்டுக் குழு தலைவா் தங்களை வீட்டுப் பணியாளா்களைப்போல் நடத்துவதாக கல்யாண் பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
பெட்டி..
ஜன. 29-இல் இறுதி அறிக்கை?
வகஃப் திருத்த மசோதா குறித்த பெறப்பட்ட கருத்துகள், ஆலோசனைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் ஜன. 27-இல் கூடும் கூட்டத்தில் அறிக்கை மீது இறுதி விவாதம் நடைபெறும் என்றும், பின்னா் அந்த அறிக்கையை ஜன. 29-இல் நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்த அறிக்கை நடந்து முடிந்த குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்தது. பின்னா் பட்ஜெட் கூட்டத் தொடா் முடியும் வரையில் கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்குகிறது.