11 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 17) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) வரை இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், வியாழக்கிழமை (ஜூலை 17) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகப்பட்டினம்-101.84, திருத்தணி-101.84, திருச்சி- 101.66, புதுச்சேரி 101.3, வேலூா்- 100.94, சென்னை மீனம்பாக்கம்-100.58, தஞ்சை-100.4 என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்தது.