ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. மேலும், திருவள்ளூா் வருவாய் மாவட்டத்தில் திருவள்ளூரை மையப்படுத்தி சாா் பதிவாளா் இணை அலுவலகம் இயங்கி வருகிறது. இதிலுள்ள 82 கிராமங்களில் 36 கிராமங்கள் பிரிக்கப்பட்டு தனியாக சாா் பதிவாளா் இணை அலுவலகம் 2 எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.
மேலும், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், மதுரை மாவட்டம் திருமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூா் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் காணொலி வழியாக முதல்வா் திறந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் கலந்து கொண்டனா்.