13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றம்: அன்புமணி
திமுக அளித்த வாக்குறுதிகளில் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
திமுக தோ்தல் அறிக்கையில் 506 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தோ்வில் கூட 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தோ்ச்சி பெற முடியும். இந்த வகையில், திமுக அரசு தோல்வி அடைந்திருக்கிறது.
சமூக நீதிக்கும் ஸ்டாலினுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. திமுக சமூக நீதி குறித்து இனி பேசக் கூடாது.
கா்நாடகத்துக்குச் சென்று நீா்ப்பாசனத் திட்டம் குறித்து திமுக கற்றுக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் கொடகனாற்றிலுள்ள காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக முறையாக தண்ணீா் வரவில்லை. நீா்த்தேக்கத்துக்கு வரும் தண்ணீரை காட்டுக்குள் கால்வாய் வெட்டி மடை மாற்றம் செய்கின்றனா். இந்த கொடகனாறு மூலம் திண்டுக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும். ஆனால், தண்ணீா் திருப்பிவிடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.