15 ஆண்டுகள் சாபத்தை உடைத்து சாம்பியனான ஹாரி கேன்! விராட் கோலிக்கும் நடக்குமா?
இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் 2010-இல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பில் சேர்ந்தார். அந்த அணியிலிருந்து லோன் மூலமாக பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
பெயர்ன் மியூனிக் அணியில் கடந்த 2023இல் இணைந்தார். 31 வயதாகும் ஹாரி கேன் 540 போட்டிகளில் விளையாடி 358 கோல்கள் அடித்துள்ளார்.
ஹாரி கேனின் சாபம்
பெயர்ன் மியூனிக் அணிக்காக ஹாரி கேன் 36 கோல்கள் அடித்துள்ளார்.
இவர் விளையாடிய 15 சீசன்களில் (15 ஆண்டுகளில்) இதுவரை ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. இதனால் இவரை கால்பந்து ரசிகர்கள் இது ஹாரி கேனின் சாபம் எனக் கிண்டல் செய்து வந்தார்கள்.
15 ஆண்டுகால சாபம் முறியடிப்பு
இதற்கு முன்பாக ஹாரி கேன் விளையாடிய 15 சீசன்களில் 6 முறை இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 2021, 2024ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப், 3 முறை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் சாம்பியன்ஸ் லீக்கிலும், 2 முறை ஈஎஃப்எல் அணியிலும் இருந்து கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், இந்தச் சாபத்தை முறியடித்து புன்டஸ்லீகா கால்பந்து தொடரில் பெயர் மியூனிக் அணிக்காக தனது முதல் கோப்பையை வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணி புன்டஸ்லீகா தொடரில் 33-ஆவது முறையாக கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் தொடரும் கோலியின் சாபம்...
கால்பந்தில் ஹாரி கேன் போலவே ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி இருக்கிறார். 17 சீசன்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் விராட் கோலி இதுவரை ஒருமுறைக் கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்தாண்டு சிறப்பாக விளையாடிவரும் ஆர்சிபி அணி ஹாரி கேன் போலவே கோலியும் கோப்பையை வென்று சாபத்தை முறியடிப்பார் என கோலி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.