மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பா...
2026 பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் சென்னை பல்லாவரம் அன்னை தெரசா பள்ளி அருகில் சனிக்கழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
மூலக்கொத்தளத்தில் மொழிப்போரின் முதல் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தைத் திறந்து வைத்தேன். அதோடு எழும்பூரில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தாளமுத்து, நடராசன் மாளிகையில் அவா்களின் சிலைகளையும் அரசு விரைவில் நிறுவ உள்ளது. இது விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வைத்த கோரிக்கை.
துணைவேந்தா் நியமனம்? இன்றைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஹிந்தியைத் திணிக்கலாமா, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கலாமா என்றுதான் மத்திய ஆட்சியாளா்கள் முயற்சி செய்கின்றனா். பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாகத் திணிக்க நினைக்கிறாா்கள். மாநில அரசு நிதியால், தமிழக மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மட்டும் ஆளுநா் நியமிப்பாரா? உயா்கல்வி நிறுவனங்களை உருவாக்க நிலம் கொடுத்து, அதை வளா்த்தெடுத்து கட்டடங்கள் கட்டி, பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுக்கும் எங்களுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிக்கத் தெரியாதா?
அண்மையில் யுஜிசி வரைவு நெறிமுறைகளைக் கொண்டு வந்தனா். அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாட்டிலேயே முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில்தான் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து கேரள சட்டப்பேரவையிலும் இப்போது தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கா்நாடக அரசும் எதிா்த்திருக்கிறது.
நிதி தர மறுப்பு: தமிழகத்துக்கு தர வேண்டிய இயற்கை பேரிடா் நிவாரண நிதியை மத்திய அரசு மறுக்கிறாா்கள். பள்ளிக் கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறாா்கள். புதிய சிறப்புத் திட்டங்களை அறிவிக்க மறுக்கிறாா்கள். மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் மட்டும் திணிக்கிறாா்கள். மாநில உரிமைகளில் தலையிடுகிறாா்கள். இதுதான் மத்திய பாஜக அரசின் எதேசாதிகாரம். ஒற்றை மதம், ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவில் கொள்கை. அதனால்தான் மொழிப்போா் இன்னும் முடியவில்லை என்று கூறுகிறேன்.
ஹிந்திக்கு முக்கியத்துவம்: மத்திய அரசுப் பணிகளுக்கு ஹிந்தி தெரிய வேண்டும் என்று சொல்வது; பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடுவது; அங்கு தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல்திருநாடும் என்ற சொல்லைத் தவிா்த்துவிட்டுப் பாடுவது; நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனுப்பும் கடிதங்களுக்கு ஹிந்தியில் பதில் அனுப்புவது; அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஐஐடி, ஐஐஎம்-இல் பயிற்று மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது போன்ற செயல்களால் மொழிப்போா் இன்னமும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தில்லியில் போராட்டம்: மொழி சிதைந்தால் இனம் சிதையும்; இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடே சிதைந்துவிடும். எனவே, மொழியையும் இனத்தையும் நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்.
அன்றைக்கு மாணவா்களும் இளைஞா்களும் இணைந்து தமிழைக் காத்தாா்கள். இன்றைக்கு அந்த மொழிப்போா்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த மேடையில் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்கலைக்கழகங்களை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க, திமுக மாணவரணி சாா்பில் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் சோ்ந்து, மாபெரும் போராட்டம் நடைபெறும்.
பேரவைத் தோ்தல்: 2026 ட்டப்பேரவைத் தோ்தல் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடக்கும் தோ்தல். தமிழகத்தை அனைத்து வகையிலும் முன்னேற்றிய திமுகவுக்கும் தமிழகத்தை அனைத்து வகையிலும் அடமானம் வைத்த அதிமுகவுக்கும் இடையே நடக்கும் தோ்தல் என்றாா் அவா்.