பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?
சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், உடனடியாக போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திக்கை வைத்து அந்த பெண்ணை பிடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதன்படி, கார்த்திக் அந்த பெண்ணிடம் குழந்தையை வாங்க எங்கே வர வேண்டுமென செல்போனில் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், குழந்தையை விற்கும் பெண்ணுக்கு ரூ.10 லட்சம், தரகராக செயல்பட்ட தனக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் பணத்துடன் திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதிக்கு வருமாறு கூறியிருக்கிறார்.
அதன்படி, கார்த்திக் மற்றும் போலீசார், புழல் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் ஆண் குழந்தையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தார்.
தொடர்ந்து, அங்கு மறைந்திருந்த போலீசார், பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் வித்யா என்பதும், குழந்தை விற்பனையில் இடைத்தரகராக செயல்படுவதும் தெரியவந்தது.
இதனையடுத்து, வித்யாவின் வீட்டில் இருந்த குழந்தையின் தாய் மற்றும் மற்றொரு பெண் என 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 பச்சிளம் குழந்தைகளை மீட்டனர்.

வித்யாவின் செல்போனில் பச்சிளம் குழந்தைகளின் படங்கள் அதிக அளவில் இருந்ததால், அவர் இதையே தொழிலாக செய்து வந்தாரா? எத்தனை பேருக்கு குழந்தைகளை விற்றிருக்கிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.