சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
"4 குழந்தைகள் இருந்தாலும், ஒரு பள்ளியைக் கட்டி ஆசிரியரை நியமிப்போம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்
சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்துக் குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த நலத்திட்ட விழாவில் அமைச்சர் பி.மூர்த்தியுடன் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
'அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?' என்ற கேள்விக்கு, "இந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்துக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
புதிய தரவுகளுடன் கூடிய அறிக்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் வெளியிடப்படவில்லை. அரசுப் பள்ளி என்பது சேவை அடிப்படையில் செயல்படக்கூடியது. தனியார்ப் பள்ளி என்னதான் கல்வியைப் போதித்தாலும் அவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்க்கக் கூடியவர்கள்.
நான்கு குழந்தைகள் இருந்தாலும் அங்கு ஒரு பள்ளிக் கட்டடம் கட்டி ஆசிரியரை நியமிப்போம், சேவை மனப்பான்மையோடு அரசு செயல்படும். மாணவர்களின் நலன் சார்ந்து அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தால் அந்தக் கருத்து ஏற்கப்படும்" என்றவர், "எங்களுடைய நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, சசிகாந்த் எம்.பியைச் சந்தித்துள்ளார்.
ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் எங்கள் உரிமைக் குரலை நிலைநாட்டினாலும், கூட்டணிக் கட்சி எம்பி-யான சசிகாந்த் செந்தில் எம்பி நாடாளுமன்ற கவனத்தை, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்தினார்.

சசிகாந்த் செந்தில் எம்பி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். ஒரு இளைஞராக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தை நடத்தி இருந்தார்.
முதலமைச்சர் ஜெர்மனியிலிருந்தாலும், சசிகாந்த் செந்தில் எம்பி-யின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியை உடனடியாக அனுப்பி வைத்தார்.
சசிகாந்த்தாக இருந்தாலும் சரி, அன்பில் மகேஸ் பொய்யாமொழியாக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்தமாக எல்லோரும் மக்கள் குரலாக மீறினால் அப்படியாவது பள்ளிக் கல்வி நிதியை மத்திய அரசு விடுவிப்பார்களா என்ற ஏக்கம்தான் எங்களுக்கு உள்ளது" என்றார்.