`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா
ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும் இந்த இரண்டாம் கட்ட சீசனுக்கு வட மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவது வாடிக்கையாக இருக்கிறது.

தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் பூங்காக்களில் மலர் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு மலர் நாற்று நடவு பணிகளை இன்று காலை தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த இரண்டாம் கட்ட சீசனுக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகின்றன.
தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் குறித்து தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகிகள், "எதிர் வரும் இரண்டாம் கட்ட சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி கோல்டு, ஃபிரெஞச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, காஸ்மோஸ், ஸ்வீட் லில்லியம், கிரைசாந்திமம், கேலண்டுலா உள்ளிட்ட 60 வகையான மலர்களின் விதைகள் பெறப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

இதுதவிர, 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்ஃபினியம், டேலியா, ஆந்தூரியம், கேலா லில்லி போன்ற 30 வகையான மலர்ச்செடிகள் நடவுப் பணியும் தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சீசனைக் கண்டு ரசிக்க சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான மலர் செடிகள் ஒட்டுமொத்தமாக பூத்து, பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது " என்றனர்.