50 சதவீத மானிய விலையில் சிவன் சம்பா நெல் விதைகள்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சிவன் சம்பா பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுமென வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிடுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண்மைத் துறையில் 2025--26 ஆம் ஆண்டு முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில், மருத்துவக் குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
சிவன் சம்பா 130 முதல் -140 நாள்கள் நெற்பயிராகும். ஏக்கருக்கு1200 முதல் -1500 கிலோ வரை மகசூல் தரவல்லது. சிவன் சம்பா அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும், குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. எலும்பு மற்றும் தசை வளா்ச்சிக்கு உதவுகிறது.
சிவன் சம்பா, மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி மற்றும் கருங்குருவை ஆகிய ரகங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டதால், நீரிழிவு நோய் குறைபாடு உள்ளவா்களுக்கு மிகச்சிறந்த உணவாகப் பயன்படுகிறது.
அதிக அளவில் மருத்துவ குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேளாண்மை துறை விதை உற்பத்தி ஊக்கத்தொகையாக 1 கிலோவிற்கு ரூ. 15 வழங்குகிறது. சிவன் சம்பா பயிரிட விரும்பும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ ரூ.35 என்ற வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் மற்றும் வேளாண் அலுவலா்களை 9952417105 என்ற எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.