ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுற...
BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்!
'ஆபட்து அப்பட்து' என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? இல்லை இந்த வார்த்தையே புதிதாக இருக்கிறதா? புதிதாக இருக்கிறதென்றால் என்றால் உங்களை சுற்றி ஒரு 2கே கிட் இல்லை என்று அர்த்தம். யூடியூபில் வெளியான இரண்டு மாதங்களில் 76 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது இந்த பாடல். இந்த எண்ணிக்கையில் இந்தியர்களும் கணிசமான பங்கை கொண்டிருக்கின்றனர்.
இப்போதெல்லாம் இன்ஸ்டா, ஸ்பாடிஃபை என உலகம் முழுவதும் வைப் செய்யப்படுவது தென் கொரிய பாடல்கள்தான். எப்படி உலகம் முழுவதிலும் நம் விருப்பு வெறுப்புகளில் ஹாலிவுட்டின் தாக்கம் இருந்ததோ, அந்த இடத்தை தற்போது நிறப்ப முனைகிறது கே-பாப்.
உலகம் முழுவதும் கே-பாப் ரசிகர்கள்!
1960-70களில் கொரிய போருக்கு பிறகு அமெரிக்காவின் தாக்கம் தென் கொரியாவின் அனைத்து அம்சங்களிலும் நிறைந்திருந்தது. அமெரிக்க-கொரிய கலாச்சாரங்களின் ஒத்திசைவில் உருவானதுதான் இந்த K-Pop (Korean Culture - Popular Culture).
படிப்படியாக வளர்ந்த கே-பாப், 2010-களில் உலகம் முழுவதும் பிரபலமானது. open gangnam style என்ற தென் கொரிய பாடலை உலகம் முழுவதுமே கேட்டு திளைத்தது. BTS, EXO, BLACKPINK, மற்றும் TWICE என பல பாடல் குழுக்கள் பிரபலமடைந்தது இந்த காலகட்டத்தில்தான். குறிப்பாக பிடிஸ் உலக அளவில் பேசப்படும் பிரச்னைகளை வரிகளில் பதிவு செய்வது, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது போன்ற செயல்பாடுகள் மூலம் மிகப் பெரிய சந்தையை உருவாக்கி வைத்திருந்தது.
தற்போது இசை, பொழுதுபோக்கைக் கடந்து ஆடைகள், மேக்கப், வாழ்க்கைமுறை என அனைத்திலுமே கே-பாப்பின் தாக்கம் அதிகரித்துள்ளது. 5 கோடி மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்க உலகம் முழுவதும் 22 கோடி ரசிகர்கள் உள்ளனர். வியக்க வைக்கிறதல்லவா இந்த புள்ளி விவரம்...
பாடல்கள் மட்டுமல்ல...
கே-பாப் என்றாலே பாடல்கள் மட்டும் நினைவுக்கு வரும் காலம் மாறிவிட்டது. ஏனென்றால் இப்போது நெட்ஃப்லிக்ஸில் டாப் வெப் சீரிஸாக இருப்பது ஸ்குவிட் கேம் என்ற தென் கொரிய சீரிஸ்தான்.
கொரிய திரைப்படங்களுக்கென்று உலக சினிமா ரசிகர்களிடையே தனி மதிப்பு இருக்கிறது. சுவாரஸ்யமான கதைக்களங்களுடன் வித்தியாசமான மேக்கிங் டெக்னிக்குகளை இணைப்பதில் கொரிய ஃபிலிம் மேக்கர்கள் வல்லுநர்கள். Park Chan-wook, Bong Joon-ho போன்ற இயக்குநர்களின் படங்கள் அதற்கு சாட்சி.
கொரிய திறமையாளர்களின் படைப்புகள் அமெரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்ட தயாரிப்பு முறைகளுடன் இணையும் போது உலமே கொண்டாடும் கொரிய ட்ராமாக்கள், ரொமாண்டிக் காமடிகள் உருவாகின்றன. இவை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஏற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
கொரிய பொழுதுபோக்கு உலகின் வரவேற்பறைதான் பி.டி.எஸ் மற்றும் பிளாக்பின்க் போன்ற பிரபலமான பாடல் குழுக்கள். இந்தியா, துபாய், சிங்கப்பூர் என கண்டம் விட்டு கண்டம் கொரிய வீடியோ கேம்களும், சீரிஸ்களும், திரைப்படங்களும் வசூலைக் குவிக்கின்றன. கடந்த ஆண்டு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் எழுதிய வெஜிடேரியன் (மரக்கறி) நாவல் நோபல் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.
கை கூடிய காலம்...
1987ம் ஆண்டு தென்கொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் தளர்ந்த பிறகு சென்சார்கள் தளர்த்தப்பட்டன. பல டிவி சேனல்கள் திறக்கப்பட்டன. அதுவரை ஹாலிவுட் மற்றும் ஹிப்-ஹாப் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்த பலர் படைப்பாளிகளாக உருவாகினர்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன உற்பத்தியில் வேகமாக வளர்ந்தது தென் கொரியா. பணப்புழக்கம் அதிகமாக இருந்த முதலாளிகள் ஸ்டூடியோக்களை நிறுவி திரைப்படங்கள், தொடர்களை தயாரிக்க ஆரம்பித்தனர். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான SM Entertainment, YG Entertainment, JYP Entertainment, DSP Media எல்லாமும் சொந்த ஸ்டூடியோக்களில் இயங்கியதால் நஷ்டம் குறித்து பெரிதாக சிந்திக்கவில்லை.
ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஊர் தோறும் நடைபெற்ற ஆடிஷன்கள் மூலம் பலநூறு திறமையாளர்களைக் கண்டறிந்தனர். HOT, Shinhwa போன்ற பாடகர் குழுக்கள் நாடுமுழுவதும் ஏற்படுத்திய தாக்கம் பலரையும் பொழுதுபோக்கை நோக்கி உந்தியது.
அதுவரை பின்பற்றப்பட்ட ஜப்பானிய முறையிலான கலைஞர்கள் மேலாண்மை முறை நீக்கப்பட்டது. புதிய ஏஜென்சிகள் இளம் திறமையாளர்களை அவர்களது பதின் பருவத்திலேயே கண்டறிந்து, பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தங்களைப் போட்டனர். அவர்களை சரியான பக்குவத்துக்கு உருவாக்கி தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி பிரபலப்படுத்தினர்.
கொரிய பாடகர் குழுக்களில் உள்ள நபர்கள் பெரும்பாலும் இத்தகைய ஏஜென்சிகள் மூலம் நண்பர்களாக உருவாக்கப்பட்டவர்கள்தான்.
2000களில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கே-பாப் பாடல்களும் நிகழ்ச்சிகளும் ஹிட் ஆகின. இணையதளம் மூலம் ஒளிபரப்பும் வசதிகள் வந்தபிறகு எந்த தடையும் இல்லாமல் உலகம் முழுவதும் தென்கொரிய கலாச்சாரம் பரவியது.
நீங்கள் எதாவது ஒரு கொரிய நிகழ்ச்சியை பார்த்துவிட்டால் போதும் உங்களுக்கு இனிக்க இனிக்க கொரிய தயாரிப்புகளை திணிக்கும் அல்காரிதங்கள் கே-பாப்பின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளன.
புதிதானது ஆனால் தொடர்புடையது...
கே-பாப் நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு காரணமே அவற்றை ரசிக்கும் யாவருக்கும் புதிதானதாகவும் அதே வேளையில் தொடர்புடையதாகவும் இருக்கும்.
பாராசைட் படத்தில் வரும் அழுக்கான கொரிய நபர்களை நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரொமாண்டிக் ட்ராமாக்களில் பார்க்க முடியாது. அவர்கள் வளவளப்பான தெளிந்த சருமத்துடன் இருப்பதே பிற நாட்டு பெண்களின் ஈர்ப்புக்கு காரணம்.
அமெரிக்காவின் ஹைபர் செக்ஸுவலான காட்சிகளை பார்த்து வளரும் ஒரு இளைஞனுக்கு கே-பாப்பில் மெதுமெதுவாக காதலும் காமமும் கருவாகி உருவாகி இறையாகும் காட்சிகள் புதிய ஆனந்தமான உணர்வை வழங்குகின்றன.
கொரியன் ரொமாண்டிக் சீரிஸ்களை எழுதும் பெண்கள் தங்கள் கற்பனையில் கனவு ஆண்களை எழுதி குவிப்பதே இவற்றின் வெற்றிக்கு காரணம். சில வாரங்களுக்கு முந்தைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொரிய சீரிஸ்களால் கவரப்பட்டு கொரிய பெண் போல உடை அணிந்த பெண், "கொரியன்ஸ் பெண்களை நல்லா நடத்துவாங்க" என சொன்னதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
நம் ஊரில் சுதா கொங்காரா எழுதும் ஆண் பாத்திரங்கள் கரடுமுரடாக இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு பிடித்திருக்க காரணம், அதை எழுதியது ஒரு பெண் என்பதுதானே... அப்படித்தான் Park Hye-ryun, Kim Eun-sook போன்ற பெண் கதாசிரியர்களின் எழுத்துக்களில் வரும் ஆண்கள் சாதாரண இந்திய பெண்ணைக் கூட ஈர்த்து விடுகின்றனர்.
பல திரைப்படங்கள், ஒரு பணக்கார ஆண் சாதாரண வாழ்க்கையை வாழும் ஏழை பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். இதுவே நம் ஊர் ஆண்கள், பணக்கார பெண், ஏழையான ஆணை காதலிப்பதாக எழுதி குவித்திருக்கின்றனர்.
கொரிய கலாச்சாரத்தில் உணவுக்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது. அதிவேகமாக, எளிமையாக உடனடி உணவுகளைச் சாப்பிடும் மேற்கத்தியர்கள் உணவு வழி அன்பைக் கடத்துவதாக காண்பிக்கும் கொரிய சீரிஸ்களால் ஈர்க்கப்படுகின்றனர். பலரும் தொடர்களில் பார்த்த கொரிய உணவுகளை சுவை பார்ப்பதற்காகவே விமானம் ஏறியிருக்கின்றனர்.
மொத்த உலகுக்கும் கதை சொல்லுதல்...
கொரியா செல்லும் பலரும் தொடர்களில் கண்ட கலாச்சாரத்தை, கர்வச்சியான நபர்களைத் தேடி தோற்றுப்போயிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.
கொரிய தொடர்களில் நடிப்பதற்காக, அந்த நாட்டுக்கு சென்றுள்ள பிரஞ்ச் நடிகை மேரி, "என்னுடைய டேட்டிங் அனுபவங்கள் நான் நினைத்தபடி செல்லவில்லை" என பிபிசிக்கு அவரது அனுபவங்களைப் பகிர்ந்தபோது குறிப்பிட்டுள்ளார். "நான் ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்பவில்லை. நான் வேலை செய்யவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்புகிறேன். எனக்கு திருமணம் ஆனாலும், நான் காதலில் இருந்தாலும் நண்பர்களுடன் க்ளப்புக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் இங்குள்ள பல ஆண்கள் நான் இவற்றைச் செய்யக் கூடாது என நினைக்கின்றனர்" என்கிறார்.
கொரிய தொடர்களில் மேரிக்கு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அவர் பார்த்ததுபோன்ற கொரிய ஆண்... கடல்லயே இல்லையாம்!
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் விரும்பத்தகாத அம்சங்களிலிருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு ஒரு புதிய உலகம் தேவைப்படுகிறது. அதை கட்சிதமாக அமைத்துக்கொடுக்கிறது கொரிய தயாரிப்பு நிறுவனங்கள்.
அதிகம் நுகரப்பட்டுவந்த அமெரிக்காவின் அதீத பாலியல் காட்சிகள், கதையம்சங்களை விட, அழகான, அக்கறையுள்ள மற்றும் துணிச்சலான ஹீரோவுடன் மெதுவான ரொமான்ஸில் ஈடுபடும் கதையோட்டமே பெண்களுக்கு பிடித்ததாக உள்ளது.
முதலாளித்துவத்தால் ஏற்மாற்றம் அடைந்தவர்களுக்கு பாரசைட், Squid Game போன்ற கதைகள் சரியான தீனியாக அமைகிறது. ஒட்டுமொத்த உலகுக்கும் மெயின்ஸ்ட்ரீம் கதை சொல்வது மிகவும் சவாலான ஒன்றுதான்.
சில நெகடிவ் பக்கங்கள்...
இதற்காக கே-பாப் பாடல்களில் அதிகமாக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை கவனித்திருப்பீர்கள். கொரியாவிலேயே மக்கள் இதை எதிர்க்கின்றனர்.
மிகவும் கச்சிதமான முக அமைப்பு உடைய நடிகர்கள் மட்டுமே ரொமாண்டிக் கதைக்களங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது மற்றொரு இருண்ட உண்மை. அதாவது நம் ஊரில் வெள்ளையா இருந்தா மட்டுமே ஹீரோ எனக் கூறியதுபோல, குறிப்பிட்ட முக அமைப்பு மட்டுமே உலகில் அனைவரும் ரசிக்கக்கூடியதாக அமைந்தது. மேலும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர்கள் மேலும் மேலும் படைப்புகளை உருவாக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சரியான படைப்பாளிகளுக்கு பணமும் நேரமும் கொடுக்கப்படும்போது எந்த திரைத்துறையும் உலக அரங்கை அடைய முடியும். நல்ல திட்டமிடுதலும், தெளிவான வியாபார நோக்கும் பொழுதுபோக்குத்துறையை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் வல்லமை கொண்டவை. அட்டகாசமான படங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஹாலிவுட்டை மட்டுமே நம்பியிருக்கும் அவசியம் சர்வதேச ரசிகர்களுக்கும் இருக்காது என்பதற்கு கொரியா ஒரு முன்னுதாரணம்!