Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!
ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது நடக்கலாம்" என அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.
டோக்கியோ பெருநகர நிர்வாகம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வீடியோவில் கூறப்பட்டுள்ளதன்படி, அதீத மக்கள் நெருக்கடிக் கொண்ட டோக்கியோ நகருக்கு 1-2 மணி நேரத்திலேயே எரிமலை சாம்பல் வந்தடையும்.
நகரின் மேற்கு பக்கத்தில் 30 செ.மீ வரை சாம்பல் சேரும் என்றும் மற்ற பகுதிகளில் 10 செ.மீ சாம்பல் சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தண்டவாளங்களிலும், ஓடுபாதைகளிலும் சாம்பல் சேருவதனால் ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். புகை கண்ணை மறைப்பதாலும் சாலைகள் சேதமடைவதாலும் வாகனங்களை ஓட்டுவது ஆபத்தானதாகும். ஈரமான சாம்பலால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபடும். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்படும்.
Tokyo releases AI-generated video of Mount Fuji erupting..
— Global (@GlobaltrekX) August 26, 2025
It is all part of an artificial intelligence-generated video the Tokyo Metropolitan Government released last week to raise awareness of what could happen to the capital if Mount Fuji erupted. pic.twitter.com/PFKKT2Rcu4
எரிமலை வெடிப்பு மக்களுக்கு எரிச்சல் மற்றும் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும். முன்னதாக ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.
எரிமலை வெடிப்பு ஏற்படும்பட்சத்தில் மக்கள் 3 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவைக்க அதிகாரிகள் அறிவுறுத்துவர். அதனால் கடைகளில் உணவும் பொருட்களும் முற்றிலுமாக தீரும்.
30 செ.மீட்டருக்கும் அதிகமான சாம்பல் வரும் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்படுவர். முக்கியமாக மர வீடுகள் உள்ள இடங்களில் மக்கள் வெளியேறும் சூழல் ஏற்படலாம் என வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கமே வீடியோ வெளியிட்டதால் மக்கள் பூஜி மலை வெடிக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த வீடியோ எரிமலை வெடிப்பால் ஏற்படக் கூடிய மிக மோசமான சாத்தியத்தைக் காட்டுவதாகவும், பூஜி மலை இன்னும் சில வருடங்களில் வெடிக்கும் அபாயம் இல்லை எனவும் வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.